Tuesday, June 26, 2012

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம்


காயத்ரி மந்திரம்:
                      "நம்முடைய தேசீய மந்திரமாக இருப்பது, தேசீய லட்சியமாக இருப்பது, மானிட வர்க்கத்திற்கே லட்சியமாக இருப்பது காயத்ரி மந்திரம்.  வேதத்தினுடைய சாரம் காயத்ரியில் அடங்கியிருக்கிறது. மானுட வாழ்க்கையின் இலட்சியத்தை அது விளக்குகிறது. "

                    " காயத்ரி மந்திரம் பிரார்த்தனையாகவும், தியான சுலோகமாகவும், அமைந்திருக்கிறது.  பரபிரம்மத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்கு பல காயத்ரி மந்திரங்கள் அமைந்திருக்கின்றன.  அவைகளை தேவி காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி, சுப்ரமணிய காயத்ரி, கணேச காயத்ரி என பாகுபடுத்தலாம்.  இத்தனை வித காயத்ரிகளுள் நாடு முழுவதும் பல்லாண்டுகளாகப் பொதுவாக இருந்து வருகிற காயத்ரி ஒன்றேயாம்.  இது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்ரி என்று அழைக்கப்படுகிறது.  இனி பரம ஹம்ச காயத்ரி என்பது ஒன்றுண்டு.  அது துறவியர்களுக்கு உரியதாகும்.  துறவியர்கள் உட்பட வழிபாடு செய்கின்ற மக்கள் எல்லோர்க்கும் பொதுவாக இருப்பது சூரிய காயத்ரி. "

ஓம் பூர்புவஸ்ஸுவ்:
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி!
தியோ யோ ந: ப்ரசோதயாத்!!

ய: யார்ந:நம்முடைய திய:
அறிவை ப்ரசோதயாத்:தூண்டுகிறாரோ
தத்:அந்த தேவஸ்ய:சுடருடைய
ஸவிது:கடவுளின் வரேண்யம்:
மேலான பர்க: ஒளியை
தீமஹி தியானிப் போமாக
" யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக "

                    இது தான் காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம், " காயத்ரி மந்திரத்தை மற்றவர்களோடு கூடியிருந்து உரக்க உச்சரிக்கலாம்.  இறைவனுடைய நாம பஜனத்தை எல்லோரும் ஒன்று கூடியிருந்து உரக்க உச்சரிப்பது போன்று, காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.....  காலையிலும், மாலையிலும், நண்பகலிலும் ஆகிய மூன்று சந்தியா வேளைகளில் இந்த வழிபாட்டில் ஈடுபடுவது உசிதம்.  நண்பகலில் இதில் ஈடுபட இயலாவிடில், ஒரே ஒரு தடவை இந்த ஈடுபாட்டை ஞாபகத்திற்கு கொண்டு வந்தால் போதுமானது.  உடல்பயிற்சி உடலை உறுதிப்படுத்துவது போன்றும், கல்வி மனதைப்  பண்படுத்துவது போன்றும், காயத்ரி மந்திரம் மனிதனுடைய ஆத்ம சொரூபத்தை ஊக்குவிக்கிறது. காயத்ரி மந்திரத்தை உரு ஏற்றுபவர்களுக்கு நன்மை உண்டாகிறது.  ஆடவர், மகளிர் என்ற பாகுபாடின்றிப் பெரு வாழ்வை நாடும் பெரு மக்கள் எல்லோரும், இந்த சிறந்த வேத மந்திரத்தை  நன்கு பயன்படுத்துவது உசிதம்.

                       காயத்ரியை வழிபடுபவன், காயத்ரி மந்திரத்தைச் சரியாக அறிந்து உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லோரும் துவிஜர்கள் ஆகின்றனர்.  துவிஜன் என்றால் இரு பிறப்பாளன். 

                      தாயின் வயிற்றிலிருந்து பிறந்து வருவது ஒரு பிறவி.  தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத்திருத்தி அமைக்க ஆரம்பிக்கும் பொழுது மனிதன் ஆன்மீகத்துறையில் இன்னொரு பிறப்பு எடுத்தவன் ஆகிறான்.  ஆகையினால், அவன் துவிஜன்- இரு பிறப்பாளன் என்று சொல்லப்படுகிறான்.  அதற்குத் தூண்டுதலாக வந்தமைந்ததிருப்பது காயத்ரி மந்திரம்.

No comments:

Post a Comment